விநாயகர் என்ற சொல் சிறப்பான தலைவன் அல்லது தலைவர்களுக்கெல்லாம் தலைவன் எனப்பொருள்படும். எந்தக்கடவுளை வழிபட்டாலும் முதலிலே வழிபடப்படும் தெய்வம் விநாயகக் கடவுள் ஆகும். விநாயகரின் தோற்றம் பற்றி சம்பந்தரின் பினரும் தேவாரம் விளக்கி நிற்கிறது.

"பிடியதன் உறுஉமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடுமவர் இடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே"


"உமை பெண் யானையின் உருவெடுத்தார். சிவன் ஆண் யானையின் வடிவெடுத்தான். இருவரும் இணைந்தனர், தன்னை வழிபடுகிறவர்களது துன்பங்களை நீக்குகின்ற கணபதி பிறக்குமாறு சிவன் இவ்வாறு அருள் செய்தார்" என்பது அப்பாட்டின் பொருள.

சிவ வழிபாட்டு முறை

காலையிற் குளித்து, உண்ணுமுன், தீய நினைவின்றி அமைந்த வுள்ளத்துடன் அக்கமாலை யணிந்து திருநீறு பூசிச் சிவப் படிமை முன் நின்று, இயலும்போதெல்லாம் தேங்காயுடைத்து வாழைப் பழத்துடன் படைத்து, நறும்புகை காட்டிப் பூச்சாத்திக் கைகுவித்து, (ஓம் என்னும் முளை மந்திரத்தை முன்னிட்ட) சிவ போற்றி என்னுந் திருவைந் தெழுத்தை ஓதி, பல்வேறு போற்றித் தொடர்களால் வழுத்தி, நெடுஞ்சாண்கிடை வணக்கஞ் செய்து எழுந்திருப்பதே சிறந்த முறைப்பட்ட சிவ வழிபாடாகக் கொள்ளப் பட்டது.

பைரவர் வழிபாட்டு முறை

எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் பைரவர் என்று அழைக்கப்படுகிறார். பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்றும் பொருள் கூறப்படுகிறது.

அம்பிகை வழிபாட்டு முறை

திருவிளக்கு வழிபாடு என்பது இந்து மதத்தில் இடம்பெறும் ஒரு வழிபாட்டு முறையாகும். இறைவனை ஒளிவடிவாக உருவகித்து நலன்களை வேண்டி நடத்தப்படும் வழிபாடு திருவிளக்கு வழிபாடாகும்