ஒவ்வொரு கல்பத்திலும் சம்ஹார மூர்த்தியாகிய சிவபிரான், பிரபஞ்சம் முழுவதும் ஒரு மகா பிரளயத்தை உருவாக்கி உயிர்கள் அனைத்தையும் சம்ஹரிக்கிறார்.அது நடைபெற்ற நாளே மகாசிவராத்திரி பெரும்பாலான சிவராத்திரிகளைக் கவனித்தால் அவை சதுர்த்தியிலேயே அமைவதைக் காணலாம். அமாவாசைக்கோ பௌர்ணமிக்கோ முந்திய பதினான்காம் திதிதான் சதுர்த்தி.
இந்த பதினான்காம் நாள் சிவனுக்குரியது என்பது சாஸ்திர விதியாகும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு திதியை ஒதுக்கிவரும் போது சிவனுக்கு ஒதுக்கியது இந்தச் சதுர்த்ததிதி.கிருஷ்ணபட்சமானால் மறுநாள் அமாவாசை, அது சந்திரன் முழுமையாக மறையும் நாள். சுக்ல பட்சமானால் மறுநாள் பௌர்ணமி. அது சந்திரன் முழுமையாக ஒளிரும் நாள்.தொடக்கம் முடிவு இரண்டையும் நிறைவாக்கும் பொறுப்பு பரமேசுவரனுடையது என்பதற்காக இது அமைந்தது போல் இருக்கிறது
சிவம் என்பதற்கு மங்களம் என்று பொருள், சிவராத்திரி சிவனுக்குரிய இரவு மட்டுமல்ல, அது மங்களத்திற்கும் உரிய இரவாகும்.
மகா சிவராத்திரியின் மேன்மையை வாதூலம் முதலிய ஆகமங்கள், சிவமகாபுராணம், ஸ்காந்தம், பத்மம் உள்ளிட்ட பத்து புராணங்களும் குறிப்பிடுகின்றன. சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் ஒரு பொழுது உணவை மட்டுமே முதல் நாளில் உண்ண வேண்டும்.
நீராடி சிவசந்நிதியில் சிவ பூஜையை மேற்கொள்ளுவது சிறந்தது. பூஜை செய்ய முடியாதவர்கள் கோயிலுக்குச் சென்று அங்கு நடக்கும் பூஜையைக் கண்டு களிக்கலாம். அன்று முழுவதும் உபவாசமாக இருத்தல் வேண்டும். பகலில் உறங்கக் கூடாது. இரவிலும் நான்கு ஜாமங்களிலும் சிவ பூஜையில் கலந்துகொள்ள வேண்டும்
பூஜை முறைகள்
"சிவ பூஜா விதி" என்ற நூல் சிவராத்திரி தினத்தில் நான்கு ஜாமமும் எவ்விதம் பூஜை முறை அமைய வேண்டும் என்று விளக்கம் தருகிறது.
முதல் ஜாமத்தில் பஞ்சகௌவியம் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்து, செம்பட்டு ஆடை அணிவித்து, அரிசி அட்சதை இட்டு, பொன்னாபரணம் சாற்றி, வில்வ இல்லை தாமரை அலறி மலர்களால் அர்ச்சித்து, பச்சை கர்ப்பூரம் சந்தனம் சேர்த்த தூபமூட்டி, புஷ்ப தீபம் காட்டி, முற்கான்னம், வில்வ பழம், பாலன்னம் நைவேத்தியம் செய்து ரிக்வேதம் பாராயணம் செய்து பூஜை செய்ய வேண்டும்.
இரண்டாவது ஜாமத்தில் பஞ்சாமிர்தத்தினால் அபிஷேகம் செய்து மஞ்சள் ஆடை சாற்றி அட்சதை இட்டு மரகத ரத்தினாபரணம் அணிவித்து துளசி வில்வ இலைகள், சண்பகம்,தாமரை மலர்களால் அர்ச்சித்து அகிற்புகை காட்டி, நட்சத்திர தீபம் ஏற்றி, பலாப்பழம் மற்றும் பாயசன்னம்,பரமான்னம் நைவேத்தியம் செய்து யசூர் வேதம் ஓதி வழிபட வேண்டும்.
மூன்றாம் ஜாமத்தில் தேன் அபிஷேகம் செய்து, வெண்பட்டு அணிவித்து, கோதுமை அட்சதை இட்டு, மாணிக்கபரணம் சாற்றி,முட்கிலுகை, வில்வம் அருகு இலைகளாலும் செங்கழுநீர், அத்தி, பிச்சி பூக்களாலும் அர்ச்சித்து, கஸ்தூரி கலந்த சந்தனம், பச்சை கர்ப்பூர தூபமூட்டி, பஞ்சமுக தீபம் காட்டி கிருசாரன்னம் மாவும் நெய்யும் சேர்த்த பலகாரங்களைப் படைத்து சாமவேதம் பாடிச் சிவ பரப்போருளை வழிபட வேண்டும்.
(இக்காலத்தில் இந்த முறையில் பெரும்பாலான மக்களால் சிவபூஜை செய்ய முடியாதுதான், எனினும் பக்தி சிரத்தையுடன் இயன்றமட்டில் பூஜை முறைகளைப் பின்பற்றினாலே சிவகிருபை நிச்சியம் பெறமுடியும் என்பது சத்தியம்) வேதம் ஓதுவதற்கு தெரியாதவர்கள் தேவாரம் திருவாசகம் போன்றவற்றை ஓதலாம். நைவேத்தியம் படைப்பவர்கள் தம் வசதிக்கேற்ப தமக்கு பிடித்தவற்றை படைப்பதில் தவறில்லை என்று நந்திகேசுவர புராணம் கூறுகிறது, இந்த உண்மை அபிஷேகம் அலங்கார அணிகலன்கள் ஆகியவற்றுக்கும் பொருந்தும்
பூஜையுடன் சேர்த்து இசையால் இறைவனை வழிபடலாம். இறைவனின் அற்புதங்கள் பற்றிய கதைகளைக் காது குளிரக்கேட்கலாம். முற்றிலும் உபவாசம் இருப்பதுதான் சிறந்தது. அது முடியாதவர்கள் முதல் ஜாமம்வரை மட்டுமாவது உபவாசம் இருந்துவிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.
விரத சமயத்தில் பாலும், நீரும் பழமுமே உண்பதற்கு உகந்தன. பலகாரம் உட்கொள்வது சரியல்ல.
சிவராத்திரி முடிந்த மறுநாள் மகேசுவர பூஜை தினமாகும். அன்று பாரணை எனப்படும் உபவாசத்திற்கு பிறகு உட்கொள்ளும் முதல் உணவை உட்கொள்ள வேண்டும். பிறகு பகல் பொழுதை சிவபுரானங்களைக் கேட்டு அல்லது சொல்லி சிவசிந்தனையில் கழிக்க வேண்டும். இரவில் உணவின்றி உறங்கச் செல்லவேண்டும்.
1. தேவி வழிபட்ட இரவு
ஒரு கல்பம் முடிந்து மகாபிரபல்யம் ஏற்பட்ட காலத்தில், சகல உயிரினங்களும் ஒடுங்கிய ஒரு பேரமைதி நிலவியது, எங்குமே இருள் மாயம், அங்கு சிவனையும் சக்தியையும் தவிர எஞ்சியவர்கள் எவருமில்லை, சிவனோ யோகா சமாதியில் ஆழ்ந்திருக்கிறார். மீண்டும் படைப்புக் கடவுள் பிரமன் தோன்றி, ஒடுக்கத்தில் உள்ள உயிர்களைப் படைக்கும் நேரம் நெருங்கிவிட்டது
அன்னை சக்தி ஒடுங்கியுள்ள உயிர்கள் அனைத்தும் மீனும் தோன்றப்போகிறது என்பதை உணர்கிறாள். கருணாமயி ஆன உமையவள் சென்ற கல்பத்தில் உயிர்கள் உற்ற நினைத்து மனம் உருகுகிறாள். மீண்டும் உற்பவம் ஆகியிருக்கும் உயிர்கள் பந்த பாசம் என்ற வினைத்துயர் நீங்கி சிவபுண்ணியம் என்ற அழியாச் செல்வம் எய்தி சிவானந்த முக்தி பெறவேண்டுமென்று அந்த இரவின் நான்கு ஜாமங்களிலும் அவள் சிவ பெருமானைப் பூஜிக்கிறாள். இதுவே மகாசிவராத்திரி. இதுதவிர மகா சிவராத்திரியின் பெருமைக்கு வேறு சில காரணங்களும் வழங்கபப்டுகின்றன
2. அடிமுடி தேடியது
சிவபிரானின் அடியும் முடியும் தேடிச் சென்ற திருமாலும் பிரமனும் அவை தென்படாமையால் திகைத்து நின்றனர். அப்போது உருவிலி ஆகிய எம்பிரான் ஜோதிவடிவினராகத் தோன்றுகிறார். " உருவிலியான சிவன், அருவுருவமாகிய லிங்க வடிவத்தில் லிங்கோற்பவ காலத்தில் தோன்றியதால் இது மகா சிவராத்திரி" என்பர் சிலர்.
3. ஆலகால விஷம்
தேவர்கள் கடைந்த பாற்கடலில் ஆலகால விஷம் தோன்றியது. உலகை உய்விக்க சிவபிரான் அந்த விஷத்தை தாம் ஏற்றுப் பருகி தியாகராஜனாக உயர்ந்த காலம் சிவராத்திரி என்றும் ஒரு வரலாறு வழங்கியது.
4. தேவர்கள் வழிபட்ட இரவு
சூரியன், சந்திரன் , அக்னி , ஆகிய மூவரும் சிவ பெருமானின் மூன்று கண்களாக விளங்குகிறார்கள், அன்னை சக்தி ஒரு சமயம் விளையாட்டாக சிவபிரான் கண்களைப் பொத்துகிறாள், அதனால் சகல புவனங்களும் இருந்துவிட எல்லா உயிர்களும் கதிகலங்கித் துன்புறுகின்றன. அப்போது இறைவனை தேவர்கள் வழிபட்டு மீண்டும் ஒளிமீட்ட தினம் சிவராத்திரி என்பர் ஒரு சாரார்.
மேலே குறிப்பிட்ட காரணங்கள் சிவராத்திரிக்குச் சொல்லப்பட்டாலும் உயிர்களின் துன்ப நீக்கத்திற்கும் மனமாசு அகலவுமே அவை குறிக்கோள் ஆவதை உணரலாம்.
சிவராத்திரி குறித்து காஞ்சி மாமுனிவர் கூறுவது,
"உருவமற்ற முழுமுதற் கடவுள் பக்தர்களின் பிரார்த்தனைக்கு இணங்கி, அரூபத்துக்கும் ஸ்வரூபத்துக்கும் இடையே உள்ள ஜோதிர்லிங்கமாகக் காட்சியளித்த நன்னாளே மகா சிவராத்திரி.இந்தப் புனிதமான தினம் பிரார்த்தனைக்கும் தியானத்துக்கும் சிறந்த நாள். அன்று நாடு இரவில் பரமசிவன் லிங்கோத்பவராகத் தோன்றுகிறார்.
இந்தத் திருநாளுக்கு சரியாக 108 நாட்களுக்கு முன்பு தட்சினாயனத்தில் அஷ்டமி நாடு இரவில் மகாவிஷ்ணு பூர்நாவதாரமான கிரிஷ்ணாவதாரம் செய்தது குறிப்பிடத்தக்கது. நம்மை போஷித்து முடிவில் நம்மை ஆட்கொள்ளும் கருணாமூர்த்தியான சிவபெருமானின் நினைவாக, சிவராத்திரி முழுவதும் உபவாசம் இருந்து நித்திரை இல்லாமல் சிவத்தியானம் செய்ய வேண்டும்.
பிறப்பில்லாத பரமசிவன் பக்தர்களின் அன்புக்குச் செவி சாய்த்துப் பிறக்கும் நடுநிசியில் அவரை நினைத்து அவருடைய திருநாமங்களை ஜபித்துக் கருணைக்கு பாத்திரமாக வேண்டும்.அவரை நாம் நாள்தோறும் நினைக்காமலிருந்தும் இந்த சிவராத்திரி நன்னாளிலாவது நினைத்து அவரது அருள் விலாசத்துக்கு பாத்திரமாக வேண்டும்.
*** முற்றும் ***
தொகுப்பு : இரா பத்ம குமரக் குருக்கள்