பிரதோஷ பூஜை செய்பவர்கள் அஷ்ட ஐஸ்வர்யங்களையும், சகல சௌபாக்கியங்களையும் பெறுவார்கள், ஒரு நாள் பிரதோஷம் பார்ப்பது பதினைந்து நாள் கோயிலுக்குச் சென்று வந்த பலன் கிடைப்பதும், பதினோரு பிரதோஷங்கள் பார்ப்பது ஒரு கும்பாபிஷேகத்தை கண்ட பலனைக் கொடுப்பதும், நூற்று இருபது பிரதோஷங்களைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு மறுபிறவியே இல்லை என்றும் அருளாளர்கள் கூறுகிறார்கள்.
பிரதோஷ தினத்தன்று பகல் முழுவதும் உபவாசம் இருந்து சிவசிந்தையுடன் சிவபுராணம், சிவ நாமாவளிகளைப் படித்து, முடித்தவர்கள் மௌன விரதமிருந்து, மாலையில் சிவாலயம் சென்று பிரதோஷ வைபவத்தில் கலந்துகொண்டு நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய் தீபம் ஏற்றி வணங்கி வருதல் வேண்டும்.
பிரதோஷ வைபவம் முடிந்து வரும்பொழுது, ருத்ரம் வேதம் ஓதும் வேதியர்களுக்கு (பிராமணர்களுக்கு) தானம் வழங்குதல் நலம் , சிவனடியார்களுக்கு உணவளித்த பிறகே உணவு கொண்டு பிரதோஷ விரதத்தை முடிக்க வேண்டும். பிரதோஷ விரதத்தை தவறாமல் அனுஷ்டிப்பவர்கள் கடன் தொல்லைகளிலிருந்தும் வறுமைகளிலிருந்தும் விடுபட்டு செல்வச்செழிப்பை அடைவார்கள் . தீராத நோய் நொடிகளிருந்து விடுபட்டு நோயற்ற வாழ்வைப் பெற்று சுகமாக வாழ்வார்கள்.
மாணவர்கள் நினைவாற்றல் பெருகி, மனமயக்கம் விலகி தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெறுவார்கள். நீதி மன்றத்தில் உள்ள வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பொதுவாக பிரதோஷ விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்
பிரதோஷ வரலாறு
தேவர்களும் அசுரர்களும் ஒருவரை ஒருவர் பகைத்துப் போர் புரிவார்கள். தேவர்கள் நரை, திரை, மூப்பு, மரணம் என்ற துன்பங்கள் இன்றி வாழ விரும்பினார்கள். இவை அணுகாமல் வாழ வேண்டுமானால் சிவ மூர்த்தியை வேண்டினால் இறைவன் ஒரு சொல்லால் இவற்றை அருள்வான். இந்தச் சுருக்கமான நெறியை அறியாத தேவர்கள் பிரமதேவனிடம் சென்று தங்கள் கருத்தை அறிவித்தார்கள். பிரமதேவர் தேவர்களுடன் திருமாலிடம் சென்று "சாவா மூவா நலம் பெற என்ன வழி?" என்று வினவினார்.
திருமால் "திருப்பாற்கடலைக் கடைந்து அமிர்தம் உண்டால் மரணமின்றி எப்போதும் இளமையுடன் வாழலாம்" என்று ஆலோசனை கூறினார். இந்திராதேவி தேவர்கள், திருப்பாற்கடலை அடைந்து பாற்கடலை கடைய முயன்றார்கள், மந்திர கிரியை மத்தாகவும், வாசுகி என்ற நாகராஜனை தாம்புக் கயிறாகவும் அமைத்தார்கள். திருமால் கூர்மமாகி மந்திரகிரியை தம் முதுகில் தாங்கினார். அசுரர்கள் வாசுகியின் தலைப்புரமும், தேவர்கள் வால்புரமும் நின்று கடையலானார்கள்.
அந்த நாள் தசம திதி, அன்று ஒரு வேலையுண்டு திருப்பாற்கடலை கடைந்தார்கள். மறுநாள் ஏகாதாசி பதினோராவது திதி. பாற்கடலைக் கடைந்த போது வாசுகி வருத்தம் தாங்காமல் பதைபதைத்து நஞ்சை உமிழ்ந்தது, கடலிலிருந்தும் நஞ்சு தோன்றியது. வாசுகி கக்கிய ஆலமும், கடலில் தோன்றிய ஆலமும் ஓன்று சேர்ந்து ஆலாலம் என்ற பெயர் பெற்றது. இந்த ஆலாலம் மிக்க பயங்கரமாக வெப்பத்துடன் உலகத்துக்கே முடிவு செய்வதுபோல விண்ணவரை விரட்டிவிட வலமாகவும், இடமாகவும் மறித்துத் துரத்தியது, திசைதோறும் தேவர்கள் நடுங்கி ஒடுங்கி ஓடினார்கள்.
வெண்ணிறமாக இருந்த விஸ்ணு மூர்த்தி விஷ வேகத்தால் நீல நிறமானார், வானவர்கள் அஞ்சி திருக்கயிலாயம் சென்று அரனாரிடம் அடைக்கலம் புகுந்தார்கள் தஞ்சம் புகுந்த வானவர்கள் "தேவ ! தேவ ! மகாதேவா! அருட்பெருங்கடலே! கருணைக் குன்றே! தேவரீர் ஆண்டான் நாங்கள் பாற்கடல் கடைந்தோம். அந்த விவசாயத்தில் முதலில் விளைந்தது தேவரீருக்கு உரியது என்று முறையிட்டார்கள்.
கருணையே வடிவான கண்ணுதற்கடவுள் தமது அருகிலிருந்த சுந்தரரைப்பார்த்து ... "சுந்தரா ! அவ்விடத்தை இவ்விடத்திற்கு கொண்டுவா " என்று பணித்தருளினார். சுந்தரர் மாலயனாதி வானவர்களால் அணுகமுடியாத அதிபயங்கரமான கொடிய விஷத்தை நாவல்பழம் போலத் திரட்டி உருட்டிக் கொணர்ந்து சிவபெருமானிடம் தந்தார். இறைவன் அந்தக்கொடிய விஷத்தை அடியவர்களான அமரர்கள் உய்ய அமுதம் போல உண்டருளினார். அந்த விஷம் உள்ளே சென்றதால் உள்முகத்தில் உள்ள உயிர்கள் அழிந்துவிடும், உமிழ்ந்தால் வெளிமுகத்தில் உள்ள ஆருயிர்கள் அழிந்துவிடும் ஆதலால் உண்ணாமலும் , உமிழாமலும் கண்டத்தில் தரித்தருளினார், அதனால் எம்பெருமானுடைய செம்மேனி கண்டங்கரியதாக ஆயிற்று. அதுகாரணமாக அவர் திருநீலகண்டர் என்று பெயர் பெற்றார்.
சிவபெருமானுடைய கருணைக்கு உதாரணம் இது ஓன்று போதாதா? எம்பெருமான் நஞ்சுண்டருளிய கருணைத்திறத்தை நால்வர்களும் மற்றைய ஆன்றோர்களும் புகழ்ந்து கூறியுள்ளார்கள். இவ்வாறு தேவர்கள் பொருட்டு சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டருளியது ஏகாதாசி மாலை நேரமாகும்.
சிவபெருமான் தேவர்களை நோக்கி மீண்டும் சென்று திருப்பாற்கடலை கடியாயுமாறு பணித்தார். அவ்வாறே அமரர்களும் அசுரர்களும் மீண்டும் திருப்பாற்கடலை கடையத்தொடங்கினார்கள். பாற்கடலில் இருந்து லக்ஷ்மி, ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துபமணி, சூடாமணி, உச்சைவரம் என்ற குதிரை முதலியன ஒவ்வொன்றாகத் தோன்றின. லக்ஷ்மியை திருமால் ஏற்றுக்கொண்டார்.ஏனைய பொருட்களை இந்திராதி தேவர்கள் அடைந்தார்கள்.
*** முற்றும் ***