திருத்தலச் சிற்பக்கலை நுணுக்கங்கள்


இலங்கையில் இந்துமதம் சரித்திர காலத்துக்கு முற்பட்ட புராண, இதிகாச காலம் முதல் இன்றுவரை இந்தியத் திருத்தளங்களைச் சார்ந்தும், தழுவியும், பின்பற்றியும் வந்துள்ளது, இந்தவகையில் இலங்கையில் சைவ வைணவ மதங்கள் இரண்டும், அக்காலக் கோயில் கட்டிடக்கலை, நிர்மாணக் கட்டமைப்பு, உடட்கட்டமைப்பு ஆலய கிரியை வழிபாட்டு முறைகள் போன்ற அத்தனை அம்சங்களையும் உள்வாங்கிக் கொண்டுள்ளன. குறிப்பாக இலங்கையின் கோயில் சிற்பக் கலையானது தமிழகத்துடன் பெரிதும் தொடர்புடையதாக விளங்குகின்றது, சிவவழிபாடே பொதுவாக தமிழரிடையே பெரிதும் மேலோங்கிக் காணப்படும் வழிபாட்டு முறைமையாகும். இந்த வகையில் கோயில் கோபுரச் சிற்பங்கள் என்பன பெரும்பாலும் தமிழகத்தின் பண்டைய திராவிடக் கலையினை பிரதிபலிக்கும் களஞ்சியமாகவே விளங்குகின்றன. கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலானது தென்னிந்திய சிற்பக்கலைஞரால் கட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது


இலங்கையின் இந்துமத வரலாற்றில் கருங்கல்லால் மட்டும் கட்டப்பட்ட ஆலயமாக விளங்குவது கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் திருக்கோயிலாகும். வெளிப்புறச் சுற்றுமதில், வானளாவிய உயர்ந்த கோபுரங்கள், உட்புறம் மூலமூர்த்தியினைச் சுற்றியமைந்துள்ள கோஷ்டங்கள், உள்வீதியில் அமையப்பெற்ற தனித்துவ ஆலயங்கள், கோயிலின் உட்புறத்தில் கூரை முகப்பைத் தாங்கி நிற்கும் தூண்கள் யாவும் கோயிலை வடிவமைத்த சிற்பிகளின் கற்பனா சக்தியின் பிரதிபலிப்பு எனலாம்


கருங்கல்லால் வடுவமைக்கப்பட்ட வழிபாட்டுச் சிற்பங்கள் தவிர கோயில் உள்வாசலில் வலது புறத்தே அமைந்துள்ள சந்திரனுக்கு முன்னால் அமையப்பெற்ற தூணில் ரிஷபாரூடரான சிவபிரானும், அம்பாளும் எழுந்தருளியிருக்கும் காட்சியும், அர்த்தநாரீஸ்வரரின் அருங்காட்சியும் அற்புதம் மிக்கவை, பிரமிக்கத்தக்கவை. அவ்வாறே இடதுபுறம் அமையப்பெற்றுள்ள சூரியனுக்கு முன்னால் அமையப்பெற்றுள்ள சிற்பத்தூணில் சந்தான கோபால கிருஷ்ணர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. கூரைவரை உயர்ந்துள்ள சிற்பத்தூண்களின் ஒவ்வொரு கருங்கல் தூண் முகப்பிலும் வாய்களைப் பிளந்த வண்ணமுள்ள சிங்கத்தின் முகம் சாந்தமானதாகவும் அதேசமயம் சிங்கத்துக்கே உரித்தான கம்பீரமான, எடுப்பான மிடுக்கான தோற்றத்தில் காணப்படுகிறது. அமர்ந்த நிலையில் காணப்படும் சிங்கத்தின் உருவத்தையும் பெரும்பாலும் ஒவ்வொரு கூரை தூண்களிலும் காணமுடிகிறது. கருங்கற்களால் பொளியப்பட்ட்ட சங்கிலியை வாயில் கௌவிய வண்ணமுள்ள தத்ரூபமான சிங்க உருவத்தினையும் நாம் ஆங்காங்கே காண முடிகிறது. சில சிங்கங்களின் வாயிலிருந்து சங்கிலிக்கு பதில் இல்லை தழைகளுடன் கூடிய செடி கொடிகள் விழுவது போன்று செதுக்கப்பட்டுள்ளது. இது சிற்பியின் கற்பனை வளத்தை சிந்தனை உயர்வை சிறப்புற எடுத்தியம்புகிறது



» » சிற்பக்கலை தொடர்பான மேலதிக தகவல்களுக்கு...

» » எமது பிரத்தியேக படங்களின் தொகுப்பை பார்வையிடுவதற்கு...