ஆலய உற்சவங்கள்
ஆலயங்களில் இடம்பெறும் உற்சவங்கள் பொதுவாக நித்திய உற்சவங்கள், பட்ச உற்சவங்கள், வருட உற்சவங்கள், மகோற்சவங்கள் எனச் சிவாகமத்தில் வகுத்துக் கூறப்பட்டுள்ளது.
நித்திய உற்சவம்
காலை ஏழு மணிக்கும், மாலை ஏழு மணிக்கும் நடைபெறும் பூஜைகளைத் தொடர்ந்து, சுவாமியும் அம்பாளும் திருப்பல்லக்கின் மீது அமர்ந்து மங்கள வாத்தியம், சங்கு சேமக்கலம் முழங்க சிவனடியார் கூட்டம் புடைசூழ, திருமுறைப்பாராயணம் செய்து, ஓம் நமசிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தை அடியார்கள் உச்சரித்துக் கொண்டு ஆலயத்தின் உள்வீதியினை வலம் வருதல் நித்திய உற்சவமாகும்
பட்ச உற்சவம்
பிரதோஷ பூஜை உற்சவம் என்பது, பிரதோஷ காலத்தில் பட்ச உற்சவமாக நடைபெற்று வருகிறது. பிரதோஷ காலத்தில் பட்ச உற்சவமாக திருநந்திகேஸ்வரர், சிவன் அம்பாள் ஆகிய மூர்த்திகளுக்கு விசேஷ அபிஷேகங்கள் நிகழ்கின்றன. திருநந்திதேவருக்கு அருகம்புல் மாலை கரும்பு மாலை, திராட்சைப்பழ மாலை, பூமாலை என்பன சூட்டப் படுகின்றன.
வெள்ளியிலான இருபத்தியொரு மணிகளைக் கொண்ட மாலையும் அணியப்படுவது வழமையாகும். பிரதோஷ காலத்தில் ஸ்ரீ நடராஜப்பெருமான், அதிகார நந்திப் பெருமானின் இருகொம்புகளுக்கு இடையே திருநடனம் புரிகின்றார் எனக் கூறப்படுகிறது. அவ்வாறான கொம்புகளுக்கு நெற்றிப் பட்டத்துடன் கூடிய வெள்ளிக்கொம்பு பிரதோஷ காலத்தில், பிரதோஷ பூஜை வேளையில் திருநந்திதேவருக்கு முன் தேங்காய் உடைத்து இருபாதிகளும் நெய்விட்டு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது வழமையாகும்
அவ்வாறே சிவலிங்கத் திருமேனிக்கு மலர்மாலை, வில்வம் இலைமாலை சூட்டப்பட்டு அலங்காரம் செய்யப்படுகின்றது. அவ்வாறே அம்பாளுக்கும் மலர்மாலையையும், வில்வம் இலைமாலையையும் சூட்டி அலங்காரம் செய்யப்படுகிறது. பிரதோஷ காலத்தில் இவ்வாலயத்தில் முதலாவதாக திருநந்தி தேவருக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. இவ்வேளையில் நந்திகேஸ்வரருக்கு காப்பரிசி நைவேத்தியம் படைக்கப்படுகின்றது. இக்காப்பரிசி பூஜைகள் இனிதே நிறைவானதும், பிரசாதமாக அடியவர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது.

சித்திராபௌர்ணமி
சித்திரா பௌர்ணமியன்று இத்திருத்தலத்தில் சித்திரைக் கஞ்சி வார்க்கப்படுகின்றது, சித்திரை மாதத்தில் அக்கினி நாட்கள்(காண்டாவனம்) உஷ்ணகாலம் நிகழ்வது வழமையாகும். இயல்பாக இக்கால கட்டத்தில் சூரிய வெப்பம் அதிகமாக இருக்கும். இதனால் உஷ்ணம் சம்பந்தமான வியாதிகள் பெருமளவு பரவுவது வழமையாகும், இத்தகைய நிலையினை தணிக்கும் வண்ணம், ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் திருத்தலத்தில் அக்கினி நாட்கள் ஆரம்பித்தது முதல் சிவலிங்கத் திருமேனிக்கு மேலே ஒரு வெள்ளியிலான பானை தொங்க விடப்படும். அதன் அடியில் ஒரு துவாரம் இடப்பட்டு அத்துவாரத்தினூடாக ஒரு நூல் சிவலிங்கத்திருமேனியில் படும்படி விடப்படும். தினமும் காலைப் பூஜையின்போது இப்பானையில் தீர்த்தம் ஊற்றப்பட்டு அப்புனித தீர்த்தம் நூலினூடாக வந்து சிவலிங்கத் திருமேனியை நனைத்த வண்ணம் இருக்கும். அவ்வாறே காலைப் பூஜையின் போது தயிர்சாதம் நிவேதிக்கப்படுகிறது.

ஆடிப்பூரம்
ஆடிப் பூரத்தை இறுதி நாளாகக் கொண்டு முதல் பத்து தினங்களுக்கு இவ்வாலயத்திலே ஸ்ரீ சிவகாம சௌந்தரி அம்பாள் உற்சவம் நடைபெறுவது வழமை. அபிஷேகம் , பூஜை யந்திர பூஜை, சக்கர பூஜை, இலட்ச அர்ச்சனை, விசேஷ ஹோமம் என்பன தினமும் நடைபெறுவதுவழமையாகும். அது நிறை வானதும் தாராஹோமம் (நெய் சொரிதல்) இடம்பெறுகின்றது.